‘போரிலக்கியம்’ இரு நாவல்களை முன்வைத்து ஒரு கதையாடல்-விமர்சனம்-மிஹாத்

கடந்த காலத்தில் போர் ஒரு அரசியல் தீர்மானகரஅம்சமாக இருந்த போது இலங்கைத் தமிழ்ப்பரப்பைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட பெரும்பாலான கதைகள் போர்காலவாழ்வை மையச்சரடாகக் கொண்டு அமைந்தவைதான்.

ஏற்கனவே உள்ள பல்வேறு கதைகளும் தமிழினவிடுதலை உணர்வின் வெப்பம் தணிந்து விடாதபடியும் வாசகமனதைத் திசைதிருப்பி விடாமலும் பாதுகாப்பதற்கான உள்ளடக்கங்களை புனைவாக்கம் செய்து பிரதிமுழுவதும் தூவப்பட்டதாயிருக்கும். அல்லது தமிழின அடக்குமுறைக்கு எதிரானவசைகளால் போதையூட்டப்பட்ட எழுத்துப்பாணியினை புனைவுமொழியாகக் கொண்டிருக்கும்.

இன்னொரு வகையில் இலங்கைத் தமிழ் எழுத்துப்பரப்பில் வெளிவந்த அநேகமானகதைகளை நோக்கினால் அவை இரண்டுவிதமானநிலைப்பாடுகளைக் கொண்டு அமைந்திருப்பதனை அவதானிக்கலாம்.

1 – புலிஆதரவு நிலைப்பாடு கொண்டஎழுத்துக்கள்.

2 – புலிஎதிர்ப்பு நிலைப்பாடு கொண்டஎழுத்துக்கள்.

தமிழ்தேசஅரசியல் விடுதலை சிந்தனையானது முனைப்படைந்து வன்முறையாக உருவெடுத்த காலம் முதல் இந்த இரட்டை எழுத்தரசியல் தீவிரமடையத் தொடங்கிற்று.இந்த அரசியல் விகாரம் கொண்ட படைப்பு மனநிலையில் இருந்து எழுத்தாளர்களை மீட்டெடுக்க முடியாமல் போய் இன்று வரை தொடர்வதானது தமிழ் போர் இலக்கியத்தின் அவலமாகப் பார்க்கப்பட வேண்டியதாகும். இந்த அவலம் புலத்தில் இருந்துதான் அதிகமாக மேலெழத் தொடங்கியது. 2009ல் புலிகள் யாவரும் மாண்டு விட்டதற்குப் பிறகான சூழலிலும் இந்த மனநிலையில் குறிப்பிடக் கூடியளவு மாற்றம் உருவாகிவிடவில்லை.

சமீப காலமாக நாம் சுட்டிக் காட்டும் இலக்கியக் கவன ஈர்ப்பு சம்பந்தமாக புலம்பெயர்ந்து வாழும் நண்பர்கள் அதிருப்தி வெளியிடுவதை அறிய முடிகிறது. இது பற்றி பொதுவெளியில் உரையாடுவதில் அவர்களுக்கு இருக்கின்ற மனத்தடைகளையும் சங்கடங்களையும் புரிந்து கொள்கிறேன்.

அண்மையில் வெளிவந்த குறிப்பிட்ட சில புனைவுகளை நாம் புறமொதுக்க முனைவதாகவும் வேறு சிலவற்றை வேண்டுமென்றே முன்நிலைப்படுத்த முனைவதாகவும் அவர்கள் மேலெழுந்தவாரியாக குற்றஞ்சாட்டுவதனை ஏற்க முடியவில்லை. இன்றைய சூழ்நிலைக்குப் பொருத்தமான இலக்கியச் செல்நெறியை வரைவதிலே இருக்கும் எமது கவனங்களை அவர்கள் விரைவில் புரிந்து கொள்ளக் கூடும்.

அத்துடன் தமிழ்ப் பொதுமனம் ;

இங்கு தமிழ் மனம் என சுட்டுவது கடந்த போர்காலம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஆயுதக்குழுக்கள் தமிழர் என்று யாரை அழைத்தார்களோ அவர்களைத்தான். அந்த அழைப்பை யாரெல்லாம் பெருமையுடன் வீரமாகக் கொண்டாடினார்களோ அவர்களைத்தான் தமிழ் மனம் என்ற சொல்லால் அழைக்கிறேன்.அந்தத் தமிழ் பொதுமனம் கவனிக்காமல் கடந்து வந்திருக்கும் வேறொரு இலக்கிய வழித்தடத்தின் மேலுள்ள மூடிமறைப்புகளை இன்னொரு வகை பிரதிகள் மூலம் நாம் பேசித்தானாக வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை எந்தவொரு பிரதியும் புறக்கணிப்புக்குரியதல்ல. ஒவ்வொன்றும் அதனதன் பிரத்தியேக அரசியலை வெளிப்படுத்தியபடியும் வாசிப்பின் அவசியத்தைக் கோரியபடியும் இருக்கிறது. ஆனால் ஒரு பிரதியை வாசிப்பவனின் தேர்வுகள் அடிப்படையில் அதன் மீதான அனுபவம் மாறுபடக் கூடும். அந்த வகையில்தான் எனது கருத்துகள் அமைகின்றன. இங்கு நான் நிஜங்களைப் பிரதிகளுக்குள் தேடாமல் பிரதிகளின் புனைவுப் பாதைகள் வழியாகச் சென்று நினைவுகளுக்குள் தேங்கியிருக்கும் செய்திகளை மீட்டெடுக்கவே விரும்புகிறேன்.

ஒவ்வொரு பிரதியின் மீதும் தனிப்பட்ட அபிமானமும் அது சுட்டுகின்ற உள்ளீடுகள் மீது எதிர் வாசிப்பொன்றும் இல்லாது அனுபவம் கொள்வது இலக்கியக் காரியமாகாது.

இங்கு தமிழ் மனதானது ஒரு மைய அதிகார விருப்புறுதியினூடாக கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. அதற்குச் சாய்வான கருத்துகளை உற்பத்தி செய்யும் எழுத்துக்களுக்கே முக்கியத்துவம் தரப்படும் நிலை இருந்தது. அதனால் கடந்த அரைநூற்றாண்டுகளிலும் இலங்கைத் தமிழ்ச் சூழலில் எழுதிக் குவிக்கப்பட்ட எண்ணற்ற எழுத்து வகைமைகளிலிருந்து குறிப்பிட்ட மிகச் சிலதே உயர்வானதாக அல்லது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அக்கறை கொள்ளப்பட பிற அனைத்தும் ஒதுக்கப்பட்டன.

அதனால் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலான போராட்ட காலத்தில் போரையும் அதன் மேன்மைகளையும் பேசிய எழுத்துக்கள் முன்நிலை பெற்றன. பிழைப்புக்காக அகதி என்ற பெயரில் புலம்பெயர்ந்த மக்கள் அந்த அந்தஸ்தை தொடர்ச்சியாகத் தக்கவைத்துக் கொள்ள இலங்கையின் போராட்டத்தை எழுத்தில் கையாளத் தொடங்கினர். அவர்களில் புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள் என இரு பிரிவினர் உருவாகினர். உண்மையில் இந்த இரண்டு பிரிவையும் சாராதவர்களின் இலக்கிய செயல்களையே நாம் அக்கறை கொள்ள வேண்டி நிற்கிறோம்.

அந்த இரு பிரிவுகளிலும் இருந்து எழுதிக் குவிக்கப்பட்ட எழுத்துக்கள் புலம்பெயர் இலக்கியம் என வகைப்படுத்தப்பட்டன. அந்த இலக்கியங்கள் கொலைகளைக் கொண்டாடவும், கொலைகளுக்காக துயரப்படவும் மக்களைப் பழக்கின. அழித்தல் அல்லது அழிதல் என்ற சமன்பாட்டுக்குள் மட்டுமே ஒரு தேசத்தின் அரசியலை சட்டகப்படுத்தின. அவற்றை குறிப்பிட்ட அக்கறை சார்ந்த அதிகார மையங்கள் பாராட்டின. தமிழ்நாட்டிலும் அதன் மீதான பரிதாப அலையும் அக்கறையும் உருவாகி விட சில எழுத்தாளர்கள் மீது ஒளி வட்டம் சூட்டப்பட்டது. அதேவேளை அந்த எழுத்துகளுக்கு ஒரு சந்தை மதிப்பும் உருவாகிவிட தமிழக பதிப்பாளர்கள் குறிப்பிட்ட புலம்பெயர் எழுத்தாளர்களின் தலையில் மிளகாய் அரைக்கத் தொடங்கினர். அப்போது அவை வணிக சௌகரியங்களுக்காகவும் இலகுவாக அடையாளப்படுத்தப்படுவதற்காகவும் “போரிலக்கியங்கள் ” என்ற பெயர் கொண்டு அழைப்பது முறையாயிற்று.

இந்த விதமாக வளர்த்தெடுக்கப்பட்ட புலம்பெயர் இலக்கியமானது இறுதிப் போரின் முடிவோடு தனது போலியான அந்தஸ்தை இழக்க வேண்டி ஏற்பட்டது. ஏனெனில் புலிகளின் வீரத்தை ஒரு புறம் பேசியவர்களும் அவர்களின் மீதான பழியுணர்வுகளை மறு புறம் பேசியவர்களும் புலிகளின் அழிவோடு எதனைப் பேசுவதென்று தெரியாமல் அங்கலாய்த்தனர். இந்தக் கையறுநிலையே இந்தக் குழுக்களின் காலாவதிப் புள்ளியாகக் கணிக்கப் போதுமானது.

இவற்றிலிருந்து தமிழ்ப் பொதுமனம் புரிந்து கொள்வது என்னவென்றால் கடந்த ஆயுத மோதல் காலம் நெடுகிலும் மேற்குறித்த குழுவினர் போர் நிகழ்ந்த பகுதியில் நிலவிய பன்மையான அரசியல் தன்மைக்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட தனி அனுபவங்களின் பக்கமிருந்து முக்கியத்துவம் கொடுக்கவுமில்லை தென்னிலங்கையோடு சமரசத் தீர்வுக்கான அக்கறை கொள்ளவுமில்லை.

இன்று எல்லாமே கைவிட்டுப் போன நிலையில் இறுதிப்போர் உக்கிரம் பெற்ற சூழலின் துயரங்களை புலிவாதங்களுக்குச் சாய்வாக எடுத்துரைப்பதைப் பணியாக மேற்கொள்ள முனைவதனால் அவை மீண்டும் பழைய அணுகுமுறைகளையே நாடும் நிலை தோன்றியுள்ளது.

ஆனால் இவற்றுக்கு மாறாக தனிஅனுபவ அவஸ்தைகளின் பக்கமிருந்தும் பாஸிஸ நியாயங்களுக்கு புறம்பாகவும் பலவிதமான நாவல்கள் இலங்கை மண்ணைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்டிருக்கின்றன. இனி அவைதான் முக்கியத்துவமுடையதாய் மாறுகின்றன.

அந்தப் பிரதிகள் இரண்டில் இருந்து போர்காலவாழ்வையும் அதனோடிணைந்த இலட்சிய அரசியலையும் அந்த அரசியலோடு தொடர்புற்ற இலக்கியச் செல்நெறியையும் பரிசீலிப்பதே இன்றைய தேவையாய் இருக்கிறது.

அந்த தொகுதிகள் தமிழரசியலின் இரட்டைநிலைப்பாட்டுக்கு மாற்றானதளத்தில் இருந்து வெளிக்கிளம்புவதை உணர முடியும். அதற்குள் அமைப்புநீக்கம் செய்யப்பட்ட அதிகார விருப்புறுதியற்ற சமூகநெறி இழையோடுவதாகவும் கொள்ள முடியும். மட்டுமன்றி நலிவுற்ற எல்லா வகையான மக்கள் மீதும் அக்கறை கொள்வனவாகவும் இருக்கின்றன எனகொள்ள முடியும்.

அந்தப் பிரதிகள் மீது பின்னோக்கிய பார்வையை நியாயமாக முன்வைக்கும் போது அதனை நோக்கி விமர்சனபூர்வமான அரசியல் பின்னிணைப்புகள் கூடி வருவதை மறுக்கமுடியாது. இந்த பின்னிணைப்புகளை குவிமையப்படுத்தி ஒரு உரையாடலைத் தொடங்குவதே நமது எண்ணமாகும்.

இந்தத் தொகுதிகளின் எண்ணவோட்டங்களை நோக்கும் போது ஒரு பிரதி போர்க்களத்திற்குள்ளிருந்து வெளிப்படும் குரலாகவும் மறு பிரதி வெளிச் சூழலில் இருந்த போரின் உபவிளைவாகவும் தென்படுகிறது.

போர் உருவாக்கிய அகதி வாழ்வு என்கின்ற பிரதான அனுபவ விளைவை சூழ்நிலை எதார்த்தமாகக் கட்டமைத்து ஒருபிரதி பேசமுற்படுகிற அதேவேளை அகதி வாழ்வின் வேறுவித அனுபவங்களையும் போராட்டத்தின் பிரத்தியேக உட்சூழலையும் காட்சிப்படுத்துவதாய் அடுத்த பிரதி இருக்கிறது .

போருக்கு முந்தியிருந்த சூழலின் நெகிழ்சியைக் கூறியபடி தொடங்கி போர்க்கால நெருக்குவாரங்கள் வழியே அகதியாக மாறித் தப்பிக்க முயலும் செயல்களின் இடைவெளியிலுள்ள துயர அனுபவங்களும் அதன் பின்னரான தமிழக அகதி முகாம் தொடர்பான நெருக்குவாரங்களை ஒரு பிரதி பேச, போராட்ட காலத்தில் புலிகள் இயக்கத்தினுள் நிலவியதாகப்  பல்வேறு அசாதாரண சம்பவங்களை முன்வைப்பதுடன் உலகம் சுற்றும் உயர் திரு போராளியின் உன்னத சாகசங்களை மறு பிரதி பேசுகிறது.

இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்களின் அகதிவாழ்வானது வரலாறு முழுவதும் உள்ள போதும் 1983 ஜூலைக் கலவரத்தின் பின்னர்தான் அரசியல் முக்கியத்ததுவம் பெற்றதாக மாறியது. அகதி என்ற சொல்லுக்கு அகராதி பரிந்துரைக்கின்ற ஒற்றை அர்த்தம் ‘கதியற்றவன்’ என்பதாகும். வாழ்வதற்கு உத்தரவாதம் ஏதுமற்ற நிலையை இது முடிவு செய்கிறது. ஆனால் இலங்கையின் போர்கள் உருவாக்கிய அகதிகளில் பல வகையினரை அந்த அர்த்தத்தில் நோக்கவே முடியாது.

அகதி விடயத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சமடைந்தவர்கள், வள்ளங்களில் ஏறித் தப்பியோடி தமிழக முகாம்களில் ஒதுங்கியவர்கள்,மேலை நாடுகளுக்கு சட்ட விரோதமாகச் சென்று அகதி அந்தஸ்துப் பெற்றவர்கள் என்று பல வகைகள் உண்டு.

உள்நாட்டிலும் தமிழகத்திலும் அகதிகளானவர்களின் துயரங்கள் போரின் நிர்ப்பந்தங்களால் உருவானவை. அவர்களின் துயரங்கள் இன்றளவும் தீராதவை. அந்தத் துயர அனுபவங்களின் சிறு பகுதியொன்றை ஒரு நாவல் பேச, அகதியாவதும் ஆடம்பரமாய் ஆட்டம் போடுவதும் கூட போராட்டத்தின் முக்கியமானபகுதிதான் என மறுநாவல் புரியவைக்கிறது.

ஆனால் மேலை நாட்டில் நிலை கொண்ட தமிழ் அகதிவாழ்வானது துயரங்கள் கொண்டதல்ல, அப்படி இருந்தால் கூட அது பெரும்பாலும் தனிநபர்கள் அல்லது குழுக்கள் தாமாகவே உருவாக்கிக் கொண்டவைதான் என்று ஒரு கதை உணர்த்தும் போது மறுகதையோ தமிழகத்தில் அகதியாய் வாழ்வதைவிட தாயகத்தில் பரிதாபமாகச் சாகலாம் என அழுத்தமாய் யோசிக்கவைக்கிறது.

தமிழ் ஆயுதப் போராட்டம்  தீவிரம் அடைவதற்குக் காரணமான ஜுலைக் கலவரத்தின் பின்னர் உருவாகியிருந்த அகதிவாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தை அண்மித்தசூழலில் வழியிருந்தது. ஆனால் அது தவறிவிட்டது. அந்த அழிவுகளுக்கான பொறுப்பையும் அதன் பிறகான தமிழ்அரசியல் வெற்றிடத்தையும் மறுபக்க விசாரணைக்குட்படுத்தும் புனைவுகள் உருவாக்கப்படவேயில்லை. அதற்கான மனத்துணிவை இந்த இரண்டுபிரதிகளும் ஊட்டுகின்றன.

தொண்ணூறுகளுக்குப் பிறகான அகதிவாழ்வானது பலதரப்பட்டவையாக இருந்த போதும் அவையாவும் புலிகளின் தவறுகளால் உருவானவை. அந்தத் தவறுகளை தகவல்களாக வெளிப்படுத்தும் பிரதியாக “ஆயுதஎழுத்து ” அமைந்திருக்கிறது. இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தமானது இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான ஒப்பந்தமாகும். போரை நிரந்தரமாக நிறுத்தி வடக்கு, கிழக்கு சிறுபான்மையினரின் அரசியல் அபிலாஷைகளை ஈடேற்றிக் கொள்வதற்கு வாய்த்த அரியதொரு சந்தர்ப்பம் அதுவாகும். அந்தச் சமாதானச் சூழலை முறித்து மீண்டும் யுத்தத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் என்பது சிறுபான்மை மக்களின் தேவையாக இருந்திருக்கவில்லை. ஒப்பந்தத்தின் ஆரம்பத்திலிருந்தே அச்சூழலை மிகுந்த வெறுப்புடன் அணுகத் தொடங்கிய புலிகள் சமாதானத்தைச் சீர்குலைத்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்கான கள்ளவழிகளை மேற்கொண்டனர். பாசாங்கான ஆயுத ஒப்படைப்பு நாடகமொன்றை நடத்தி உலகை ஏமாற்றினர். வலிந்து இந்திய அமைதிப் படையை சீண்டினர். அப்பாவி மக்களை வேண்டுமென்றே இந்திய அமைதிப் படையினரின் பொறியில் மாட்டி விட்டு மக்கள் போராட்டம் போன்றதொரு தோற்றத்தை உள்ளகச் சூழலில் தோற்றுவித்து மக்களைப் பகடையாக்கிய அதேவேளை சர்வதேச ரீதியாக இந்திய இராணுவ அத்துமீறலாகவும் காண்பித்தனர். அதற்காக இந்திய இராணுவம் இலங்கையில் நடத்திய மனிதகுல விரோதச் செயல்கள் யாவும் மறைக்கப்படவோ அல்லது இலகுவில் மறந்து விடக்கூடியதோ அல்ல.

கீழ்நிலைப் போராளிகளுக்கு ஆரம்பத்திலிருந்தே போராட்டத்தின் யதார்த்தச் சூழலைப் புரிய வைக்காது தனித்தமிழீழம் என்ற கற்பனையை ஊட்டி அதற்கு எதிராக இந்தியா இருப்பதான அபிப்பிராயத்தை உருவாக்கி இந்தியவெறுப்பை விதைத்து வைத்ததினால் அச்சூழலில் அந்நாட்டுக்கு எதிராக பெரியளவான எதிர்ப்பலையை முன்னிறுத்துவது இலகுவாயிற்று. பல்வேறு போர்நிறுத்த மீறல், உண்ணாவிரத காட்சிகள் மூலம் நிலைமையை மோசமாக்கினர். இராணுவம் கடலில் கைது செய்த புலிகளை கொழும்புக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்ட போது அவர்களைச் சயனைட் உண்டு தற்கொலை புரியச் செய்து சமாதானத்தைச் சீர்குலைத்துப் போருக்கான ஆரம்ப கட்டங்களை உருவாக்கினர். இது போன்ற மறைக்கப்பட்ட அக்கால களவரலாறுகளை மீண்டும் நினைவூட்டி புதுக் கதையாடல்களை உருவாக்கும் பிரதியாக “ஆயுதஎழுத்து ” அமைந்திருக்கிறது.

அதற்குப் பிந்திய இருபதாண்டுகளில் புலிகள் மக்களுக்கானபோராட்டம் என்ற பெயரில் சர்வதேச ஆயுத வியாபாரமும் போதைப்பொருள் கடத்தலும் ஆட்கடத்துலமே செய்து வந்தனரென்பதை “ஆயுதஎழுத்து “எனும் புனைவு மனங்கொள்ளச் செய்கிறது. அந்தக் காலத்தில் சமாதானத்தை ஏற்று ஜனநாயக வழிக்குத் திரும்பிய இயக்கங்கள் மாகாணசபையை ஏற்றிருக்கா விட்டால் இன்று அதுவும் வந்திருக்காது என்பதையே புலிகளின் முட்டாள் அணுகுமுறைகள் காண்பிக்கின்றன.

“தெம்மாடுகள் ” பிரதியிலுள்ள கதையானது உள்நாட்டில் அகதிகளானவர்களின் துயரங்களை இருட்டடிப்புச் செய்து தப்பிக்க முயற்சித்தபடியே இருக்ககிறது. ஆனால் கடல் கடந்து அகதியான துயர வாழ்வின் அனுபவங்களை பேசத் துடிக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகளைக் கவனம் கொள்கிறது.

“ஆயுதஎழுத்து ” கதை மேற்கு நோக்கி பயணித்த அகதிப் போராளியின் கடந்தகால இன்பகரமான சாகசங்களையும் அரசியல் தெப்பிராட்டியங்களையும் அலச முற்படுகிறது. அந்த அனுபவங்களில் பெருமளவானவை போராட்டத்தின் மறைக்கப்பட்ட குறுக்கு வழிகளை வாசகர்கள் கண்டுபிடிப்பதற்கான கலங்கரைவிளக்கமாக பீறிட்டு நிற்கின்றன.

இரண்டாம் கட்ட ஈழப் போர் என்பது மிக அதிகமான தமிழ் அகதிகளை மேற்குலகத்திற்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்ச்சி நிரலோடு தொடங்கப்பட்டதுதான். அதற்கென பல்வேறு பணியாள் மாபியாக்கள் கண்டங்கள் முழுவதும் அமர்த்தப்பட்டிருந்தனர். அப்போது அகதியாதல் என்பது உச்ச நிலைப் பிழைப்புக்கான அந்தஸ்தைப் பெற்றது. போரில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்படாத மக்கள் வெள்ளம் பொருளீட்டும் நோக்கில் மேற்குலக அகதி முகாம்களை நிரப்பத் தொடங்கின. புலிகளும் தமக்கான நிதி திரட்டலுக்கான ஆதாரமாக மக்களையே நம்பியிருந்ததினால் பல்லாயிரக்கணக்கான மக்களை பல்வேறு சட்ட விரோதக் குடியேற்ற சாகசங்கள் மூலம் அவர்களே மேலை நாடுகளில் அகதிகளாக்கினர்.

இந்த வகை வாழ்வின் திரை கடலோடி திரவியம் தேடும் முயற்சிகளின் பரிதவிப்பை போர்கால அடக்குமுறை வாழ்வுக்குள் மறைத்து மேற்பூச்சில் அகதிவாதம் பேசும் எண்ணற்ற கதைகள் போர் இலக்கியங்கள் என்ற அடையாளத்தோடு மேற்கிலிருந்து தமிழ் இலக்கியத்திற்குள் சேர்க்கப்பட்டன.

ஆனால் “ஆயுதஎழுத்து” என்னும் கதையானது அகதியாவதையும் அதனோடு தொடர்புற்ற பல்வேறு மோசடிக் கூத்துகளையும் பொதுவெளிக்குரிய தகவல்களாக மாற்றி இலட்சியப் புலம்பெயர் அரசியல் அக்கறைகளுக்குப் பின்னாலிருக்கும் திரைமறைவுத் திருகுதாளங்களை தெரு விவாதமாக மாற்றுகிறது.

அது மட்டுமல்லாமல் கடந்த நூற்றாண்டின் இறுதியில் மேற்கில் தஞ்சமடைந்த தமிழ் அகதிகள் டயஸ்போறா சமூகமாக மாறி ஈழப் போருக்கான பொருளாதார உந்து சக்தியாகவும் சமாதானத்திற்கு எதிரான முட்டுக்கட்டையாகவும் உருவானார்கள்.அவர்கள் இந்த அளவிற்கு வளர்வதற்கான களம் தேடும் பயணத்தின் ஆரம்பத்தினை தமிழ்ப் பொதுமனம் அகதி துயரமாக நம்பும்படி கருத்தியல் பலவந்தம் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த விதமான மேற்பூச்சுப் புனித இன விடுதலை அக்கறைகளுக்குப் புறம்பாக தரகு வேலை செய்யும் ஆயுதக்குழுக்களின் ரகசியக் கருமங்களாக தமிழ்ப் போராட்டத்தைப் புரிந்துகொள்ள வலியுறுத்துகிறது “ஆயுதஎழுத்து”.

நிலையான அதிகார மையமாக மாறி இலங்கயின் அரசியல்நெருக்கடிக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் சமூகத்தின் கடந்த கால துயரங்களை இலக்கியமாக மீட்டெடுப்பதன் மூலம் போரை மறக்காமலும் பகைமையைத் தணிக்காமலும் புதிய தலைமுறையினை செப்பனிட முடிந்தால் மேலைத்தேயத் தமிழ் வாழ்வை மேலும் ஏமாற்றியும் தமிழக இரத்தங்களை சூடாக்கியும் தாயக மக்களை மீண்டும் பலி கொடுக்கலாம் என்ற நோக்கில் பல போர்க் கதைகள் உருவாகின. ஆயினும் அந்த கதைகளுக்கு மாற்றாகவும் போர் நிகழ்ந்த பூமியில் எப்பொழுதும் பல வகையான வாழ்வும் போராட்டத்தை வெறுத்த மக்கள் கூட்டமும் அவர்களுக்கென தனிப்பட்ட துயரங்களும் இருந்ததென்பதை மறு கதையான “தெம்மாடுகள் ” எடுத்துச் சொல்கிறது.

இந்தக் கதைகளின் அநேக இடங்களில் இடையறாத போர்த் தந்திரோபாயத்தின் சுழற்சி அச்சில் விடுபடமுடியாமல் பிணைக்கப்பட்ட அகதி வாழ்வின் அதீதமான துயர சம்பவ எடுத்துரைப்புக்களை காண முடியாது. அவற்றினுள் பாசாங்கான போர்ப்பிரச்சாரம் தவிர்க்கப்பட்டு மானுடக் கரிசனை கொண்ட புனைவுச்செயல் வெளிப்பட்டு நிற்பதைப் பாராட்ட வேண்டும்.

“தெம்மாடுகள்” கதையில் அகதியாதல் நிகழும் பயண அனுபவத்தின் இடையில் கிராமமக்கள் முகங்கொடுக்கும் அவலங்களை மிகைப்படுத்தாமல் காட்சியாக்குவதன் மூலம் தமிழர் வாழ்வுக்கும் போருக்கும் இடையில் அரசியல் கரிசனை ஒன்று ஏற்படுத்தப்படுகிறது.

 

சம காலத்தில் தமது வகிபாகத்தை இழந்து காலாவதியாகியிருக்கும் புலம்பெயர் போர் இலக்கியங்களுக்குச் சவால் விடும் முக்கிய கதையாக எஸ்.ஏ. உதயன் எழுதிய “தெம்மாடுகள் ” விளங்குகிறது. நுட்பமான புனைவு உத்திகளோ அல்லது புது வகை மொழி மயக்கங்களோ இல்லாத சாதாரண கதையான போதும் இது அக்கறை கொள்ளும் கதைப்பரப்பும் அதனோடு இணைந்த வாழ்வின் எடுத்துரைப்புகளும் போர் வஞ்சித்த ஒரு தொகுதி மக்களின் நடைமுறையை ஒரு புனைவுக்குரிய நேர்த்தி மிக்க அழகியலுடனும் முழுமைப்படுத்தப்பட்ட கதைகளின் களமாகவும் ஒருங்கமைக்கப்பட்டிருக்கிறது.

பேசாலை எனும் கடலோரக் கிராமமொன்றின் வாழ்வினை போரும் அதன் பங்கேற்பாளர்களும் எவ்வாறு சீரழித்து விடுகிறார்கள் எனும் ஒரு வரிப் புரிதலுக்கூடாக வளர்த்தெடுக்கப்படும் கதையானது தமிழக அகதி முகாம்களின் வழியாக ஒரு சமுதாயம் எதிர்கொள்ளும் பல்வேறு விளைவுகளையும் அடுக்கியபடி போர்த்துயரம் பற்றிய புதியதொரு புரிதலை உருவாக்குகிறது.

இந்தியச்சூழல் வழியாக மென்மையாகப் பரப்பப்படும் தொப்புள்கொடி உறவுகள் என்னும் மாயையான கற்பிதங்களை தகர்த்தெறியும் இந்த நாவலில் பலஆண்கள் தொடர்ச்சியாக வந்து போனாலும் கலா என்னும் பெண் பாத்திரம்தான் கதையை அச்சுப்பிசகாமல் நகர்த்தப் பயன்படுகிறது. செழுமையாக வார்க்கப்பட்டு முழுமையாக்கம் பெற்ற இந்தப்பாத்திரம் வாழ்வை இயல்பான போக்கில் அணுகவும் துயருறும் மனிதர்களில் அக்கறை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இது தமிழ் அகதிக் கதைகளின் பொதுமைப்பட்டதான அழகியலாக இல்லாமல் போர்கால நெருக்கடிகள் சாதாரண மக்களின் வாழ்வை எவ்வாறு சிதைக்கிறது என்னும் பின்னணியை நாடகீய இலட்சியவாதத்திற்கு உட்படுத்தாமல் நடைமுறைச்சாத்தியமான துயரங்கள் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. அநேக இடங்களில் இந்த துயரவர்ணனைகளே போராட்டத் தரப்புகளின் மீதான விமர்சனங்களாகவும் தமிழக தொப்புள்கொடி உறவு என்னும் போலிமைகளை நொந்து கொள்வதாகவும் அமைகிறது.

முப்பது வருடங்களுக்கு மேல் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களில் இடம்பெற்ற ஆயுத மோதலில் பங்கேற்ற குழுக்களில் இளைஞர்கள் அதிகமாக இணைந்து கொண்டமை உண்மை. ஆனால் அவர்கள் இன விடுதலைக்கான உன்னத உணர்வுடன்தான் இணைந்தனர் என்பது பொய்யென்று சில நாவல்களில் சம்பவங்கள் உணர்த்துகின்றன. மக்களிடம் பரவலாக பிள்ளைகள் இயக்கங்களில் சேரக்கூடாது எனும் எண்ணமே இருந்திருப்பதை நாம் குறிப்பிடும் இரண்டு நாவல்களும் சுட்டிக்காட்டுகின்றன.

அகதியான கிராம மக்கள் உயிரைத் தப்பி வள்ளங்களில் ஏறித் தமிழகக்கரை நோக்கிச் செல்கையில் அவர்களின் வீடுகளில் உள்ளவற்றைச் சுருட்ட ஒரு தரப்பு கிராமத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படும் கதையில் அப்பாவிக் குடியானவர்கள் அனைவரும் வெளியேறிய பிறகும் இராணுவத் தாக்குதல்களுக்கும் அஞ்சாமல் வீடுகளைக் கொள்ளையிட திட்டமிடுபவர்கள் யார் எனும் கேள்வி எழுகிறது. அதற்கான பதிலாய் கதையில் வேறொரு இடத்தில் ஊரில் இயக்கக்காரர்கள் தாக்குதல் வேலைகளுக்குத் தங்கியிருப்பது கூறப்படுகிறது. “தெம்மாடுகள் ” கதையானது அது நிகழும் காலத்தை வெளிப்படுத்தாத போதும் அதில் நிகழும் சம்பவங்களூடே அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தக் காலம் என்பது புலிகள் கெரில்லா மேலாண்மை பெற்றிருந்த வேளைக்குரியதென்பதையும் உணர முடிகிறது.

 

அதேவேளை யாழ் மண்ணிலிருந்து முஸ்லிம்கள் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது அவர்களது சொத்துக்களையும் இருப்பிடங்களையும் புலிகள் எவ்வாறு சூறையாடியிருப்பர் என ஊகிப்பதற்கு சந்தர்ப்பமும் ஏற்படுவதை “ஆயுதஎழுத்து ” கதையானது தீர்த்து வைக்கிறது. தமிழ்த் தரப்புகளால் எழுதப்படுகின்ற கதைகளில் பெரும்பாலும் பல்லினச் சமூகம் பற்றிய அக்கறைகள் வெளிப்படுவதில்லை. முஸ்லிம்களின் வாழ்வையும் துயரங்களையும், அரசியல் அக்கறைகளையும் இருட்டடிப்புச் செய்யும் கதைகளே வருவதுண்டு. அப்படியில்லாமல் சில கதைகளில் முஸ்லிம்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அரச ஒற்றர்களாகவும் துரோகிகளாகவும் தமிழ் அதிகாரத்துவப் பாகுபாட்டை மாற்றுக்கருத்தின்றி அடிமையாக ஆதரிக்கும் பிரகிருதிகளாகவுமே சுட்டிக்காட்டப்பட்டிருப்பர்.

ஆனால் சில எழுத்தாளர்கள் விலக்காக உள்ளனர். அதில் சாத்திரியும் ஒருவராகக் கருதப்பட வேண்டியவர். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படும் சம்பவங்கள் கதையில் நேர்மையைப் பறைசாற்றும் அழுத்தத்துடன் பதிவு செய்யப்படுகிறது. அந்தச் சம்பவங்களின் ஆழத்தில் புலிகளின் அரசியல் நிலைப்பாடானது கொடூரமானது எனும் புரிதல் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த நாவலின் சம்பவ விபரிப்புகளின் பன்மைத்துவக் குரலின் மகத்தான தருணமாக இதனைக் கொள்ள முடியும்.

“ஆயுதஎழுத்து ” கதையின் பிரதான பாத்திரமான ‘அவன்’ புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவுடன் அவனது வீட்டுச் சூழலானது அமங்கலமான ஒப்பனைகளுடன் விவரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவனது பள்ளிக்கூடக் காதலி இயக்கத்தில் சேரமாட்டேனென சத்தியம் கூட வாங்குகிறாள். இதே போன்றதொரு வர்ணனையை தமிழினியின் “கூர்வாளின் நிழலில் ” தொகுதியிலும் காணமுடியும். அதேபோல “தெம்மாடுகள் ” தொகுதியில் ஒரு இடத்தில் இவ்வாறு வருகிறது -…இந்த ஊருக்குள்ள இருந்து கொஞ்சப் பேரு தேவையில்லாத வேலை செய்யப் போய் எல்லோருக்கும் வினையாய்ப் போச்சு …

இதுதான் மக்கள் போராட்டம் என்ற பெயரில் பிரபல்யப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தின் பின்னாலுள்ள நிஜம் என இந்தக் கதைகள் யாவும் பேச முற்படுகின்றன.மக்களுக்கான போராட்டம் என்று கருதப்பட்ட பொதுவான அபிப்பிராயத்தை இரண்டு கதைகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தகர்த்து விடுகின்றன. மக்கள் பெரும்பாலும் போராட்டத்திற்கு விருப்பத்தின் பேரில் நிதியுதவி அளிப்பதில்லை என்பது கதையில் ஓரிடத்தில் வருகிறது. இங்கு மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் கூட போராட்டத்தின் பெயரால் பல்வேறு பணய நடவடிக்கைகள் மூலம் பலவந்தமாக சேகரிக்கப்பட்ட நிதியானது பல தனிப்பட்டவர்களின் சுகபோக வாழ்வுக்குச் செலவழிக்கப்பட மீதமிருந்ததே போர்க்களத்திற்குப் பயன்பட்டதெனும் பேருண்மையை “ஆயுதஎழுத்து “சுட்டி நிற்கிறது. போரில் எதுவிதமான சம்பந்தமுமற்ற ஒரு கூட்டம் இங்கு அழிந்து கொண்டிருந்த மக்களின் அவலங்களை அனுதாபப்பண்டமாக்கி சம்பாதித்து வாழ்ந்ததையும் அதற்கு ஏற்றவாறாக இலக்கியங்களையும் செய்திகளையும் உற்பத்தி செய்து தமிழ்ப் பொதுமனத்தை இருளில் வழி நடத்தியதையும் “ஆயுதஎழுத்து ” நாவல் புரிய வைக்கிறது.சாதி அடிப்படையில் இயக்கங்கள் இருந்தமையையும் அதன் படிதான் அதற்கான பொதுக்கருத்தும் உருவாகியிருந்தமையை “ஆயுதஎழுத்து “கூறுகிறது. மேலும் புலிகள் அமைப்பில் சேர்வதற்கு எந்தவிதமான கருத்தியல் ஆளுமையும் தேவையில்லை எனும் தகவலும் பரிமாறப்படுகிறது. ஒரு போராளியின்பணி என்பது ஆட்களைக் கொல்வதுதானே, அதற்கு கருத்தியல் பின்புலம் அவசியமற்றது என புலிகள் கருதியிருக்கக் கூடும் என இக்கதை சிந்திக்க வைக்கிறது. அக்காலத்தில் வீடுகளில் பிள்ளைகளைக் கண்டிப்புடன் வளர்க்கப் பெற்றோர் அச்சப்பட்டனர் எனும் விடயமும் கூறப்படுகிறது. கண்டித்தால் பிள்ளைகள் வீட்டை விட்டுச் சென்று இயக்கத்தில் இணைந்து விடுவர் எனும் எண்ணம் பெற்றோரை வாட்டியது என்ற பின்னணியில் பார்த்தால் போராட்டம் என்பது மக்களால் விரும்பப்படாத ஒரு கெட்ட விடயமாகவே கருதத் தோன்றுகிறது.அத்துடன் வங்கிக் கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து போன்ற மக்கள் விரோதச் செயல்கள் மூலம் போராட்டக்குழுக்கள் வளரும் தகவல்கள் “ஆயுதஎழுத்தில் “சொல்லப்படும் போது அதன் மேம்பட்ட பிந்திய கால குற்றச்சாட்டு வடிவமான பன்னாட்டு தரகுவேலை ஆயுதக்குழுக்கள் என்னும் பிரச்சாரத்தையும் ஏற்றுக்கொள்வதற்கான மேலும் பல தகவல்கள் கதையில் பல்வேறு இடங்களில் இருப்பதையும் அவதானிக்கவே முடிகிறது.இந்த இரண்டு கதைகளும் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலின் அகதி அனுபவங்களையும் சீரழிவான தமிழகஅகதி அனுபவங்களையும் பேசுவதாக முரண்பட்டு நின்றாலும் ஒரு விடயத்தில் ஒத்த கருத்தை முன்மொழிபவையாக உள்ளன. அதாவது தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்குத் தடையாக இருப்பவர்களும் ஒரு பிரிவைச் சேர்ந்த தமிழர்களே என்பதுதான் அது.”தெம்மாடுகளில் ” கலாவின் வாழ்வை இருள் நிரம்பியதாக மாற்றுவதற்குக் காரணம் வேறு யாருமல்ல , இங்கிருந்து தமிழகம் சென்று கடத்தல் மோசடிகளில் ஈடுபடும் அருள்நேசன் என்பவன்தான்.மறுபுறம் “ஆயுதஎழுத்து ” முன்வைக்கும் நியாயங்களின் அடிப்படையில் தமிழர்களின் அபிலாஷைகளை ஒவ்வொரு காலத்திலும் வேறுபட்ட நியாயங்களின் அடிப்படையில் நிர்மூலமாக்கியவர்கள் தமிழ் மிதவாத மற்றும் போராட்ட தலைவர்கள்தான் எனக் கணிக்கலாம்.

ஆகவே இந்த விதமான மாற்று விமர்சனங்களை உருவாக்கியபடி போர்கால வாழ்வைக் கடந்து செல்லும் போது எதிர்காலத்திற்கான புதிய அணுகுமுறைகளை உருவாக்க உந்துதலளிக்கும் இந்த நாவல்கள் இரண்டும் கொண்டாடப்பட  வேண்டியவை.

பிற்குறிப்பு :

கடந்த ஜூலை மாதம் மலையகத்தில் இடம்பெற்ற புலம்பெயர் இலக்கியசந்திப்பில் “போரிலக்கியம்” என்ற தலைப்பில் வாசிக்கவென என்னால் தயாரிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை இது .இறுதியில் இதற்குப் பல பேரங்கள் இடம்பெற்றன.

மிஹாத்

00000000000000000000000000000000

மிஹாத் – இலங்கை

மிஹாத்
மிஹாத்

(Visited 251 times, 1 visits today)