படைப்பாளிகளும், படைப்புக்களும்..-பத்தி -டி.சே.தமிழன்

1.

எனக்குப் பிடித்த ஒவ்வொரு படைப்பாளிகளையும், அவர்களின் கலையாளுமை எந்தக் காலப்பகுதியில் அவர்களுக்குள் பிரகாசித்திருக்கின்றது என்று பார்ப்பதில் ஆர்வமுடையவனாக இருப்பேன். எஸ்.பொ(ன்னுத்துரை), மு.த(ளையசிங்கம்) போன்றோர் அவர்களின் 25ஆவது வயதிற்குள்ளேயே தமது முதல் நாவல்களை (‘தீ, ‘ஒரு தனி வீடு’) எழுதிவிட்டிருந்தனர். பிரமிளின் எழுத்து ஆன்மா விளாசி எரிந்தது, அவரின் 20களிலும், 30களிலும் எனச் சொல்வேன்.  பின்னாட்களில் அவர் அதுவரை எழுதியவற்றை நிரூபிக்க எழுதியதும், பிறரோடு விவாதித்துக்கொண்டிருந்தவையுமே என்பதே என் எண்ணம்.

தேசிகன் ராஜகோபாலன்
Scott Fitzgerald

இதேபோன்று காலத்தைச் சற்று பின்னோக்கி உருட்டினால், மேற்கத்தையச் சூழலிலும் பலர் தமது 20/30களில் தமது முக்கியமான படைப்புக்களை எழுதியதைப் பார்க்கலாம். ஹெமிங்வே தனது 20களின் மத்தியில், ஸ்காட்டை (Scott Fitzgerald) சந்திக்கும்போது, ஸ்காட் அவரின் மூன்று நாவல்களையும் எழுதிவிட்டார். அதாவது 29 வயதிற்குள் அவரின் மூன்று நாவல்களையும் (‘Side of Paradise’, ‘Beautiful and Damned’,’Great Gatsby’) எழுதிவிட்டார். பாரிஸில் முதன்முதலாக ஸ்காட்டை சந்திக்கும் ஹெமிங்வேயிற்கு தான் இன்னமும் ஒரு நாவலைக் கூட எழுதிமுடிக்கவில்லையென மனம் மறுகுகிறார்.

ஸ்காட்டின் நட்பின் நிமித்தம் Great Gatsby கிடைத்து வாசித்துவிட்டு, ஸ்காட்டின் கிறுக்குத்தனங்களை பலவேளைகளில் சகிக்கமுடியாவிட்டாலும், அவரின் நாவல் ஒரு முக்கியமானதென ஹெமிங்வே தனது ‘A Moveable Feast’ இல் எழுதிச் செல்கின்றார். ஸ்காட் அதன் பிறகு குடிக்கும் வறுமைக்கும் அடிமையாகி அவரது 40களில் இறந்துபோனாலும், அவரால் அதற்குப் பிறகு ஒரேயொரு நாவலைத்தான் அவரின் வாழ்க்கைக் காலத்தில் எழுத முடிந்திருக்கின்றது. அன்று விற்பனையாகாத ஸ்காட்டின் ‘Great Gatsby’ இன்று அமெரிக்க இலக்கிய உலகில் முக்கியமான நாவல். மில்லியன்கணக்கில் விற்பனையாகின்ற ஒரு படைப்பு.

இவ்வாறு சில படைப்பாளிகள் 20களில் நாவல்களை எழுதியிருக்கின்றார்கள் என்றால், சிலர் தமது 50களில் முதல் நாவல்களை எழுதியிருக்கின்றனர். உம்பர்த்தோ ஈக்கோ, சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி போன்றவர்கள் தமது 50 வயதுகளிலேயே முதல் நாவல்களை எழுதியவர்கள். அவ்வாறு தமிழிலும் நாவல்களை தமது 50களில் எழுதியவர்கள் என்றால் லா.ச.ராமமிருதத்திலிருந்து அண்மைக்கால சுகுமாரன் வரை பலரை நாம் சொல்லலாம்.

2.

டி சே தமிழன் லா.ச.ராவின் முதல் நாவலான ‘புத்ர’ அதன் தலைப்பைப் போல குழந்தைப் பிறப்பைப் பற்றியே பேசுகின்றது. ஒரு தலைமுறையில் முன்னோர்கள் பெறுகின்ற ‘மகன் உங்களுக்குப் பிறக்காது’ என்கின்ற சாபத்தை எப்படி அந்தக் குடும்பத்தின் பல தலைமுறைகள் பிறப்புக்களோடும், இழப்புக்களோடும், இறப்புக்களோடும் எதிர்கொள்கின்றது என்பதே இந்நாவலின் ஊடுபாவு. அதை லா.ச.ரா பல தன்னிலைகளின் குரல்களில் பல்வேறு காலப்பகுதியில் வைத்து எழுதிச் செல்கின்றார்.

ஒரு நேர்கோட்டுப்பாணியில் இல்லாது கதை முன்னும் பின்னும் காலத்தில் விளிம்புகளில் அலைந்தும் நெளிந்தும் செல்கின்றது.

சம்பத்தின் ‘இடைவெளி’ நாவல் மரணத்தைப் பற்றிப் பேசுகின்ற நாவல். மரணம் என்பது என்னவாக இருக்கும் என்பதைத் தேடித்தேடி ‘இடைவெளி’ அலைகின்றது. ஒருவகையில் சம்பத்தே தனது சொந்த வாழ்வில் மரணத்தின் அர்த்தம் தேடி (இன்னொருவகையில் வாழ்க்கையின் அர்த்தம் என்பதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்) அலைந்த ஒருவராக, அன்றையகாலத்தில் அவரை அறிந்த சிலர் சொல்லியிருப்பதையும் காணலாம். ‘இடைவெளி’ முடிந்து அச்சாகும்காலத்தில் சம்பத்தின் மரணம் நிகழ்கின்றது. அவர் இறுதியடைந்த கண்டடைந்த உண்மை எதுவாக இருக்கும் என்பதற்கு அவர் இன்றில்லை, ஆனால் அவரது படைப்பு ஒரு சாட்சியமாக விரிந்துகிடக்கின்றது.

அதேபோன்று ‘புத்ர’வில் (புத்ர ஏற்கனவே 65இல் எழுதி வெளியிடப்பட்டுவிட்டது) பிறப்புக்களையும், குடும்ப சாபங்களையும் பேசினாலும் இன்னொருபுறத்தில் அது பிறப்புக்களையும் மறுபிறப்புக்களையும் பேசுகின்றது. ‘ஒவ்வொரு வியப்பும் ஒரு பிறவி. ஒவ்வொரு பிறவியும் சந்தேகத்தின் பரீஷை. தேக வழி சந்தேகத்தின் தெளிவு’ என்றொரு இடத்தில் இதை லா.ச.ரா சொல்லிச் செல்கின்றார்.

தன்னிலைகள் ஒவ்வொன்றும் தம் குரலில் பேசும்போது, வயிற்றில் உண்டான கருவொன்றும் உள்ளேயிருந்த தெளிவாகப் பேசுகின்றது;

‘கருவின் நிழலில், தருணப் பொறிமேல் விழும் பிறவியின் வரிகளாய் இவ்வளவும் காண்கிறேன். ஆயினும் உதரத்தின் இருளினின்று, நான் ஒளியில் வந்து விழுந்த தருணமே, என் மேல் என் முற்பிறவி, இப்பிறவி, பிற்பிறவி, மற்பிறவிகள், தாமே உரித்த சட்டைகளாய் விட்டுச்சென்ற சந்தேகங்கள் கவிதையில், திக்கு மருண்டு, கர்ப்பத்தின் இருளுக்கே மீள அழுகின்றேன்.’ என ஒரு கரு தனக்குள் தானே பேசவும் செய்கிறது.

அதேபோல இன்னொரிடத்தில் இதே கரு, நான் இதுவரை வடிவமற்ற ‘சடப்பொருளை’ப் போல உள்ளே இருந்துவிட்டேன். இப்போது வெளியே வரும் காலம் வந்துவிட்டது. இது பிறப்பு. ஆனால் இந்த உலகமே ஒரு கருவறை. மரணம் நம்மை இந்தக் கருவறையிலிருந்து இன்னொரு இடத்துக்கு அழைத்துச் செல்கின்றது என்று இந்த உலகையும் ஒரு கர்ப்பப்பை போல லா.ச.ரா எழுதும் இடம் சிலாகிக்கத்தக்கது.

இந்த நாவலின் தொடக்கத்தில் பெப்பர்மிண்டை விழுங்கும் ஒரு சிறுவனின் மரணம் நிகழ்கின்றதென்றால், இறுதிப்பகுதியில் மிகவும் புத்திசாலித்தனமான குழந்தையாக இருக்கும் அங்கச்சியின்  சாவு நிகழ்கின்றது. ஒருவகையில் லா.ச.ரா இந்நாவலில் பிறப்புக்களைப் பேசுவதென்ற பாவனையில் மரணங்களைப் பற்றித்தான் பேசவிழைகின்றாரோ என்று எண்ணவைக்கின்றார். அந்தவகையில் பின்னாட்களில் சம்பத் எழுதிய ‘இடைவெளி’யை, லா.ச.ராவின் ‘புத்ர’வோடு அருகில் வைத்து உரையாடமுடியுமென நினைக்கின்றேன்.

3.

இந்நாவல் தொடக்கத்தில் பல்வேறு திசைகளில் பல்வேறு நான்களின் தன்னிலைகளோடு திசைகெட்டு அலைவதுபோல பாவனை செய்தாலும், இறுதியில் நம் தன்னிலைகளை அலைக்கழிக்க வைப்பதுதான் முக்கியமானது. நேற்று, இன்று, நாளை எனச் சொல்லி எழுதப்பட்ட அத்தியாயங்கள் காலத்தை ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்க்கும் முயற்சியேயன்றி வேறில்லை. இன்று நாம் நடமாடிக்கொண்டிருக்கின்றோம் என்றால் அதே சமாந்திரத்தில் நேற்றும் நாளையும் வெவேறு மனிதர்கள் நாம் கடந்த/கடக்கவேண்டி மனிதர்கள் உலாவிக்கொண்டிருப்பார்கள் என்று காலத்தை நீட்சித்துப் பார்க்க ‘புத்ர’ நம்மை வேண்டி நிற்கின்றது.

அதேபோன்று, இதில் வரும் குடும்பத்தினர் காலங்காலமாக வழிபாடும் செய்யும் வீணைக்குச் சொல்லும் கதைகூட சுவாரசியமானது. கலைகளின் கடவுள் வீணைக்குள் நுழைந்து அதுவரை இல்லாது ஒரு அசாதாரணக் கலைஞராக மாறும் ஒருவரை தன்னோடு வைத்திருக்க விரும்பும் ஒரு தாசிப்பெண் பாலில் எதையோ வசியஞ்செய்யக் கலந்த மருந்து அந்தக் கலைஞரின் உயிரையோ பலியெடுத்துக்கொள்கின்றது. ஆனால் அவர் உழைத்த சொத்துக்களின் நிமித்தமே அவரின் வழிவந்தவர்கள் வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதால் அவரது வீணைக்கும் அம்மனுக்கும் தொடர்ந்து வழிபாடுகள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன.

எந்தக் காலத்திலாயினும் ஒரு கலைஞர் சடுதியாக இறக்கின்றபோது, அது இயற்கையாகவோ அல்லது திட்டமிட்ட கொலையாக இருந்தாலும் கூட அவர்களைப் பற்றிய கதைகள் பல்வேறாகப் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கும். இப்படி இந்த வீணைக்கலைஞரின் கதையை வாசிக்கும்போது, ஈழத்தில் மிகப்பெரும் தவில் வித்வானாக இருந்த தட்சிணாமூர்த்தியும் இந்தியாவில் பல தவில் கலைஞர்களை வென்று வாகைசூடியபோதுதான் அவரைச் சிறிது சிறிதாகக் கொல்லும் விஷம் வைக்கப்பட்டது என்ற ‘மர்மக்கதை’யும் தட்சிணாமூர்த்தியின் சடும் மரணத்தை முன்வைத்து இப்போதும் சொல்லப்படுவதையும் நினைத்துக் கொண்டேன்.

டி சே தமிழன் ‘புத்ர’ ஆச்சாரமான குடும்பத்தின் கதை என்பதால் ஆச்சாரமான விடயங்கள், அன்றைய பெண்களுக்கு இருக்கும் சிறு உலகிற்குள் என சுருங்கிக்கொண்டிருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் லா.ச.ரா அவரை அறிந்தோ அல்லது அறியாமலோ பல விடயங்களை எளிதாகக் கடந்து செல்கின்றார். ‘ஆச்சாரங்கள்’ என்பது சொற்களுக்குள்  மட்டுமே அடங்கிக் கிடப்பது, வாழ்க்கை எல்லைகளற்றது. ஆகவேதான் எவ்வளவு கட்டுப்பாடுகள் மனதுக்கும் உடலுக்கும் விதித்தாலும் மீறிச்செல்ல ஒவ்வொரு மனதும் விழைகின்றது. விலகலே வாழ்வின் நியதிகள் அல்லது விலகலுடன் இருந்த மனிதர்களைப் பற்றிச் சொல்லவே நிறையக் கதைகள்  நம்மிடையே இருக்கின்றன.

கிணற்றுப்பக்கமாய் இருந்த தென்னை மரத்திலிருந்து காத்தான் என்பவர் இறங்குகின்றார். அவர் கையில் ஒரே கொத்தில் மூன்று இளநீர்கள் தொங்குகின்றன.

வீட்டின் உள்ளேயிருந்து, ‘திக்விஜய பராக்கிரமத்தை கைலையங்கிரி வரை, போய்விட்ட தேவிக்கெதிரே’ என்ற புராணப்பாடலை பெண்ணின் மாமா பாடுகின்றார். அதில் தேவின் மூன்றாவது ஸ்தனம் எப்படி மறைந்தது எனப் பாடப்படுகின்றது.

இதைச் சொல்ல்விட்டு லா.ச.ரா தொடர்ந்து எழுதுவதுதான் அந்த மீறல்,

கல்மேல் குனிந்து துணியைக் குமுக்கிக் கொண்டிருந்தவள் இவ்வசனம் கேட்ட அத்தருணமே நிமிர்கையில், தற்செயலாய் தன் கண்ணோக்கு தன் கழுத்துக்கு கீழே விழுகையில் ரவிக்கையின் கழுத்து விளிம்பில் விம்மி வழிந்த முலைகளின் வாய்க்காலில் பட்டதும் ஒரு பெரும் விதிர்விதிர்ப்பு உடலை ஊடுருவிற்று. கைமேல் இரு கைகளை ஊன்றிக் கொண்டிராவிடின் விழுந்திருப்பாள். குப்பென உடல் பூரா வேர்வை விட்டது. குனிந்த தலை நிமிரவில்லை. திடீரென்று சூழ்ந்துகொண்ட கும்மிருட்டில் மின்னல் கிளைபிரிந்து மறைந்தது. மண்டையுள் ஆவி பறந்தது.’ என எழுதுகின்றார்.

பிறப்பையும் ,சாபங்களையும், மறுபிறப்புக்களையும் பேசியபடி இறப்பையும் மறுவிசாரணை செய்யும் படைப்பு மனமுந்தான் இந்த அழகியல்களையும் கவனிக்கச் செய்யும். பிறப்பு/இறப்பு என்கின்ற இரு துவிதங்களிடையே நுண்ணகியல்களில் கூட்டுத்தொகையில்தான் வாழ்விற்கான அர்த்தங்கள் தொங்கிக்கிடக்கவும் செய்கின்றன. தலைமுறைகளின் சாபங்களை மறுவிசாரிப்புச் செய்கின்ற நாவல்தான், சமகாலத்தில் மூன்றாம் ஸ்தனம் காணாமற்போகும் காட்சியையும் அதே தீவிரத்தோடு எடுத்துரைக்கவும் செய்கின்றது.

‘அம்மாக்களின் புதுச்சட்டை உரிப்புக்களே நமது பிறப்புக்கள்’ என்று லா.ச.ரா சொல்வதைப் போல, நாம் அம்மாக்களை மட்டுமில்லை, நம் சமகாலத்துப் பெண்களையும் எந்தளவுக்கு நாம் விளங்கிவைத்திருக்கின்றோம் என்பதை,  ஒரு  தவிர்க்க முடியாக் கேள்வியாகவும் இந்த ‘புத்ர’ மறைமுகமாக முன்வைக்கின்றது என்றே எனக்குத் தோன்றுகின்றது. இல்லாவிட்டால் பல தலைமுறைகளுக்கும் உன் குடும்பத்தில் ஆண் வாரிசுகளே பிறக்காது என்று சாபங்கொடுக்கின்ற கிழவியே, பிறகு ஜகதா என்கின்ற பெண்ணாக இந்தக் குடும்பத்திற்குள் நுழைவதும், அவளே ஒரு ‘புத்ர’னை பிறப்பித்துக்கொடுப்பதையும் ஆண்களாகிய நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியுமா?

டிசே தமிழன்-கனடா

டிசே தமிழன்

(Visited 64 times, 1 visits today)