புலம்பெயர் இலக்கியத்தின் எதிர்காலம்-‘குறுக்கும் மறுக்கும் 05’-கருணாகரன்

கருணாகரன்புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு வயது ஏறக்குறைய 40 ஆண்டுகளே. மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு 50, 60 ஆண்டுகள்தான் இப்போதைய தொடர்ச்சியில் அதனால் ஒரு தீவிர அலையாக இயங்க முடியும். அதற்குப் பின்பு அது மெலிந்து ஒடுங்கி விடக் கூடிய சூழலே  உண்டு. பிறகு அது வெவ்வேறு மொழிகளில் வேறு விதமானதாகவே இயங்கும். ஆகவே மொத்தமாகப் பார்த்தால் தமிழில் அதனுடைய ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்குள்தான். இதற்குள்ளேயே அதனுடைய சாத்தியங்கள், சாதனைகள் எல்லாம்.

இந்த அவதானிப்பை வேறு யாரும் தங்களுடைய அவதானங்களின் வழியாகவும் வேறு தர்க்கத்தினாலும் மறுத்துரைக்கலாம். ‘இதென்ன வகையான சோதிடம் – ஆருடம்? யாரிந்தத் தீர்க்கதரிசி?’ என்று அவர்கள் நகைக்கவும் கூடும். ஆனால், ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ உருவாகி வந்த வழியை நோக்கினால் இவ்வாறான முடிவுக்கே நாம் வரமுடியும்.

இந்த வழி இப்படிப்படித்தான் உள்ளது –

1980-களுக்கு முன்பே வெளிநாடுகளை நோக்கி – அநேகமாக லண்டனுக்கு – தமிழர்கள் சென்றிருந்தாலும் அவர்கள் அங்கே இலக்கியச் செயற்பாடுகளில் இயங்கியிருந்தாலும் 80 களுக்கு பிறகுதான் தமிழில் புலம்பெயர் இலக்கியம் என்று அழுத்தமாக – அடையாளம் காணக்கூடியமாதிரி அது திரட்சியடைகிறது.

1980-க்கு முன்பு சென்றவர்களுக்கு அந்தச் சிரத்தையோ எண்ணமோ இருக்கவில்லை. அதற்கான தேவையும் சூழமைவும் (நெருக்கடிகளும்) கூட அவர்களுக்கில்லை. அதாவது அப்படியொரு அடையாளம் உருவாகுவதற்கான அக   – புற நெருக்கடிகள் அவர்களுக்கிருக்கவில்லை.

ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் படிப்பதற்குச் சென்றவர்களே அதிகம். அவர்கள் முறைப்படி விண்ணப்பித்து விசா பெற்றுச் சென்றவர்கள். அங்கே தொழில்வாய்ப்பைப் பெற்றவர்கள். 1900 களிலிருந்தே இப்படிச் சென்ற பலர் இருக்கிறார்கள். இதில் ஜேம்ஸ் தம்பிமுத்து போன்றவர்கள் ஆங்கில இலக்கியத்திலேயே செல்வாக்கைப் பெற்றிருக்கிறார்கள். தமிழில் இவர்களுடைய அடையாளம் இல்லை. இதற்குக் காரணம், இவர்கள் பிறகு சென்றவர்களைப் போல அகதி நிலையில் அந்தரிப்புகளின் வழி சென்றதில்லை. அரசியல் நெருக்கடி, வாழ்க்கை நெருக்கடி, தனிப்பட்ட ரீதியான உள நெருக்கடிளுக்குள்ளாகியவர்களில்லை.

80-களில் அலை அலையாக புலம்பெயர்ந்தவர்களால்தான் புலம்பெயர் தமிழ் இலக்கியம் உருவாகியிருக்கிறது. இவர்கள் புலம்பெயர்ந்து சென்ற விதமும் அங்கே – சென்ற இடத்தில் அல்லது புகலிடத்தில் – இவர்களுக்கு ஏற்பட்ட சவால்களும் கிடைத்த அனுபவங்களும் அப்படியானவை.

இலங்கை – இந்தியப் படைகளினால் ஏற்பட்ட நெருக்கடிகள், இயக்கங்களுக்கிடையில் நடந்த மோதல், அவை உண்டாக்கிய உயிராபத்துகள், போராட்டத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, அதனால் ஏற்பட்ட அவநம்பிக்கை, அவை உண்டாக்கிய அச்சம் என்று பல காரணங்களால் இந்தப் புலப்பெயர்வு நடந்தது. இன்னொரு தரப்பு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் பிழைப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியது.

இந்த வெளியேற்றம் ஒன்றும் சுலபமாக நிகழவில்லை. நாட்டை விட்டு வெளியேறி, கடவுச்சீட்டுகளில் தலையை மாற்றி, ஏஜென்ஸிகளின் மூலமாக வெவ்வேறிடங்களில் தங்கி, அதில் ஏமாற்றப்பட்டு – அல்லது தப்பிப்பிழைத்து, ஏதோ ஒரு நாட்டில இறங்கி, அங்கேயிருந்து ரகசியமாக எல்லை கடந்து… என பெருந்துயர் நிலைப் பயணமிது.

இதற்குள் படுகின்ற சிரமங்களும் சந்திக்கின்ற ஆபத்துகளும் கொஞ்சமல்ல. இந்த அவலப் பயணத்தைப் பற்றிய வாழ்வைச் சொன்ன கதைகளும் கவிதைகளுமே தொடக்கத்தில் வந்தவை.

இவர்களில் அதிகமானவர்கள் முறையாகப் படித்துவிட்டுப் போனவர்களில்லை. படிப்பதற்காகப் போனவர்களுமில்லை. அரசியல் தஞ்சம் கோருகிறோம் என்ற அடிப்படையில் அகதிகளாகச் சென்றவர்கள். 90 வீதத்துக்கும் மேலானவர்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழியே தெரியாது. இதில் பலரும் அங்கே அடிமட்டத்திலான வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. அதைக் கூடப் பெறுவதற்குச் சிரமப்பட்டனர். ஏறக்குறைய கூலிகள் என்ற நிலையில் வேலை செய்ய வேண்டியிருந்தது. தங்குமிடம் தொடக்கம் அத்தனையும் பிரச்சினையாகவே இருந்தது.

இப்படிப் போனவர்கள் எல்லாம் தங்களுடைய உள நெருக்கடிகளை எழுதத் தொடங்கினார்கள். அதைப் பேச வேண்டும் என்ற தவிர்க்க முடியாத நிலை அவர்களுக்கு இருந்தது.

எதுவொன்று நெருக்கடியைத் தருகிறதோ, அதுவே வெளிப்பாட்டுக்கான மனநிலையையும் -உத்வேத்தையும் -சூழலையும் உருவாக்குகிறது என்ற வகையில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது.

முதலில் ஏற்பட்டது, வீட்டைப் பிரிந்த – ஊரைப் பிரிந்த துயரமே. இதைப் பிரதியீடு செய்யக் கூடிய  – அதாவது சமன் செய்யக் கூடிய – நிலை உடனடியாக அங்கே இருக்கவில்லை.

இதனால் தொடக்கத்தில் ஊரை விட்டு – நாட்டை விட்டுப் போன –  வேர் பெயர்ந்தபோன துயரத்தையும் நினைவில் கரைவதையும் சொல்ல வேண்டியிருந்தது. அது ஒரு வகையில் தங்களையும் தங்கள் நிலையையும் வெளிப்படுத்துவதாகும். மறுபக்கத்தில் இதன் மூலம் தங்களின் உள நெருக்கடிகளை ஆற்றுப்படுத்திக் கொள்வது. அத்துடன் நாட்டிலே நடக்கின்ற அரசியல் நெருக்கடிகளையும் பேசியது. அரசாங்கத்தின் இன ஒடுக்குமுறையையும் இயக்கங்களின் அராஜகப் போக்கினையும். போராட்ட ஆதரவு எழுத்துகள் ஒரு வகையாக இருந்ததும் உண்டு.

இதற்கும் ஒரு காரணம் இருந்தது. அப்பொழுது – தொடக்கத்தில் – புலம்பெயர்ந்து போனவர்கள் பெரும்பாலும் தனியன்களே. தனியாகவே ஒவ்வொருவரும் சென்றது மட்டுமல்ல தனியன்களாகவே வாழவேண்டியுமிருந்தது. இப்பொழுதுள்ளதைப்போல குடும்பங்களாகவோ சமூகமாகவோ உருப்பெற்றிராத காலம் அது.

இப்படிச் சோதனையிலிருந்தும் வேதனையிலிருந்தும் தொடங்கியதுதான் புலம்பெயர் எழுத்து அல்லது புலம்பெயர் இலக்கியம் எனலாம்.

அப்படியென்றால் இதனுடைய தொடக்கமே துயரம்தான். துயரத்தைப் பேசுதல், துயரத்தை வெளிப்படுத்தல்.

இதற்கு ஒரு உதாரணமாக – பொ. கருணாகரமூர்த்தியின் ஒரு அகதி உருவாகும் நேரம் என்ற குறுநாவலைச் சொல்லலாம்.

மேலும் பல கோணங்களும் பலருடைய எழுத்துகளும் உண்டு. நாடகங்களும் இதில் முக்கியமானவை.

அன்றைக்கு எழுதப்பட்ட கவிதைகள் அத்தனையும் இதற்குச் சாட்சி. கி.பி. அரவிந்தன் இதை வெளிப்படையாகவே சொன்னார் – முகம் கொள் – என்று. இதன் சாரம்  ‘நீ எதையும் முகம் கொள்’ என்பதாகும். சொல்லித்தீராத பக்கங்களில் இதை அங்கதமாகச் செல்வம் சொல்வது இன்னொரு சான்று.

செல்வம் (காலம் செல்வம்) தன்னுடைய கவிதை ஒன்றில் சொல்கிறார்

சிறுகுருவி வீடு கட்டும்

தென்னோலை பாட்டிசைக்கும்

சூரியப் பொடியன் செவ்வரத்தம் பூவை

புணரும் என் ஊரில் இருப்பிழந்தேன்.

அலை எழுப்பும் கடலோரம் ஒரு வீடும்

செம்மண் பாதையோரம் ஓர் தோட்டமும்

கனவுப் பணம் தேட

கடல் கடந்தோம்

நானும் நாங்களும்

அகதித் தரையில் முகமிழந்தோம்.என.

அன்றைக்கு புலம்பெயர்ந்த எல்லோருக்குமிருந்த பெரிய சிக்கல் இந்த முகமிழப்பே.

இப்பொழுதும் இந்தச் சிக்கல் தீரவில்லை. இது முழுதாகத் தீராது. குடியுரிமை கிடைத்து, குடும்பங்களாக, சமூகமாக அந்தந்த நாடுகளில் வாழ்ந்தாலும் அடையாளச் சிக்கல் பெரிய பிரச்சினையாகவே உள்ளது. இது இனி உலகளாவிய ஒரு வளர்ச்சிப் போக்கில்தான் எப்படி இருக்கப்போகிறது என்று தெரியும்.

இதில் இன்னொன்று உறவுகளைப் பிரிந்திருத்தல் – அல்லது சிதைந்து போதல் – என்பது.

யாழ் நகரில் என் பையன்

கொழும்பில் என் பெண்டாட்டி

வன்னியில் என் தந்தை

தள்ளாத வயதினிலே

தமிழ் நாட்டில் என் அம்மா

சுற்றம் பிராங்பேட்டில்

ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்

நானோ

வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்

ஒஸ்லோவில்

என்ன நம் குடும்பங்கள்

காற்றில்

விதிக்குரங்கு கிழித்தெறியும்

பஞ்சுத் தலையணையா?’

இது ஜெயபாலனின் புகழ் பெற்ற கவிதைகளில் ஒன்று.

(இங்கே நான் எதையும் அல்லது யாரையும் பட்டியலிட விரும்பவில்லை. அதற்குச் சாத்தியமும் இல்லை. சில எடுகோள்களுக்காக மட்டும் சிலதைக் குறிப்பிடுகிறேன். அதாவது இந்தப் போக்கைக் காண்பிப்பதற்காக மட்டும்.)

ஆகவே இதை நாம் புலம்பெயர் இலக்கியத்தின் முதலாம் தலைமுறை எனலாம். முதலாம் தலைமுறைக்குரிய குணாம்சம் தவிர்க்க முடியாமல் தம்மைக் கழிவிரக்கத்துடன் பார்ப்பதாகவே இருந்தது. துயரத்தைச் சொல்வது அல்லது பகிர முற்படுவதாக.

ஏறக்குறைய இந்த வழித்தடத்திலிருந்து – இந்த சுழலிலிருந்துதான் – புலம்பெயர் இலக்கியத்தின் முகம் தெரியத் தொடங்குகிறது.

இதனுடைய இரண்டாவது தலைமுறையானது, அந்தந்த நாடுகளில் விசா பெறுவதிலுள்ள நெருக்கடிகள், தொழில் தேடுவது, புதிய இடங்களில் தொழில் செய்வது, அதில் உண்டாகும் பிரச்சினைகள்,  அங்கே சந்திக்கின்ற மொழி, நிறம் போன்ற வேறுபாட்டுப் பிரச்சினைகள், முரண்நிலைகள்…. என்று விரிந்த ஒரு  அவலப்பரப்பாகியது.

எப்படியெல்லாமோ கஸ்ரப்பட்டு, எங்கோ ஒரு நாட்டுக்குப் போனாலும் அங்கேயும் நிம்மதியான வாழ்க்கையில்லை என்ற நிலை. இந்த நிலை கொள்ளாமை பெரிய அந்தரிப்பைத் தந்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் ஏற்கனவே இருந்த எழுத்துகளிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அந்தந்த நாடுகளில் – சூழலில் – அவர்கள் சந்தித்த வாழ்க்கையை எழுத வேண்டிய நிலை உருவானது. தனியே ஊர் நினைவில் உருகிக் கொண்டிருக்காமல் –நாட்டின் அரசியலைப் பற்றி, அதன் சரி பிழைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல், தங்களுடைய தனிப்பட்ட கவலைகளைச் சொல்லிக்கொண்டிருக்காமல், தாங்கள் வாழ்கின்ற சூழலில், தாங்கள் எதிர்கொள்ள நேருகின்ற பிரச்சினைகளையும் வாழ்க்கையையும் எழுத வேண்டியிருந்தது.

அதாவது பிற நாடொன்றில், பிற சமூகத்தினரோடு இணங்கி வாழ வேண்டிய அல்லது சேர்ந்து வாழ வேண்டிய நிலையை – அதில் ஏற்படுகின்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இதில் முக்கியமான ஆளாக நாங்கள் கலா மோகனைச் சொல்ல வேண்டும்.

கலாமோகன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் இதைப்பற்றி எழுதினார்கள். இவர்களோடு பார்த்திபன், கிரிதரன், பரா, அழகலிங்கம், ஸினிலோகன், தேவிகா கங்காதரன், சுகன், உமா காந்தன்,  புஷ்பராஜா, புஷ்பராணி, சபாலிங்கம், ஜோர்ஜ் குருசேவ், சந்துஷ், ஜெமினி,  கலைச்செல்வன், லட்சுமி, தயாநிதி, நிருபா, உமா, தேவா, றஞ்சி, விஜி, மல்லிகா, உமா, சரவணன், அருந்ததி அலெக்ஸ், கருணாகரமூர்த்தி, சுசீந்திரன், சோபாசக்தி, சுதாகரன், சபேசன், தமயந்தி, பானுபாரதி, தர்மினி,  கறுப்பி சுமதி, பிரதீபா, தில்லை, ஞானம், தேவதாஸ், அசுரா, ஜீவமுரளி, ராகவன், கற்சுறா , ராஐநாயகம், பத்மநாப ஐயர், மு. நித்தியானந்தன். நிர்மலா ராஜசிங்கம், இரஜீன்குமார், பத்மமனோகரன், சார்ள்ஸ், சிவராஜன், கலா சிறிரஞ்சன், முருகபூபதி, நடேசன் எனப் பெரியதொரு வரிசை எழுதியும் செயற்பட்டும் வந்தது. (இதில் ராஜேஸ்வரி சற்று முந்தியே எழுதத் தொடங்கினார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்தப் பெயர்கள் முழுமையானவை அல்ல. மேலும் நிறையை உண்டு)

சிலர் பின்னாளில் தங்களுடைய தொழில் அனுபவங்களையும் சேர்த்து எழுதுகிறார்கள். (நடேசன், ஜீவமுரளி, கருணாகரமூர்த்தி என இதிலும் ஒரு பெரிய பட்டியல் உண்டு) இது இன்னொரு வகையாகவும் இன்னொரு தலைமுறைப் பண்போடும் உள்ளது.

நெருக்கடிகளைக் கடந்து விடலாம் என்று எண்ணியதில் ஏற்பட்ட ஏமாற்றமும் மன உளைச்சலும்  இவர்களைத் தொடர்ந்தும் எழுத வைத்தது. எழுதினால் அதை எங்கே பிரசுரிப்பது? என்ற கேள்வி எழுந்தது. இதனால் எழுத்தோடு மட்டுமல்ல இதழ்களை உருவாக்க வேண்டியும் ஏற்பட்டது. இந்தக் காலத்தில் வெளிவந்த இதழ்கள் இதற்குச் சான்று.

எண்ணம், சிந்தனை, தமிழ் முரசு, அறுவை, கண், நமதுகுரல், தூண்டில்,  புதுமை, தேனீ, அக்கினி, ஊதா, பள்ளம், தேடல், வெகுஜனம், பறை, வடு, எக்ஸில், உயிர்நிழல், உயிர்மெய், மனிதம், பனிமலர், சமர், அம்மா, அ ஆ இ…மௌனம் இப்படிப் பல. (இங்கே எல்லாவற்றையும் சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும்)

இதன் அடுத்த கட்டமாக இதைப் பற்றிக் கதைப்பதற்கு – பேசுவதற்கு – இலக்கியச் சந்திப்புகளை நடத்தவும் வைத்தது. அதுவே இலக்கியச் சந்திப்புப் போன்றவை உருவாகுவதற்கான  காரணத்தையும் சூழலையும் உண்டாக்கியது. இதுதான் பிறகு – இலக்கிய ரீதியான செயற்பாட்டியக்கங்களையும் உருவாக்கியது.

இதழ்கள் வந்தாலும் இவற்றிலும் முற்று முழுதாக புலம்பெயர் இலக்கியம் உருவாகியது என்று சொல்ல முடியாது. அதாவது வாழிடத்தை, அதன் அனுபவத்தை, அந்தச் சூழலில் வாழ்வியங்கும் தன்மையை, வேரற்ற நிலையை எல்லாம் முழுமையாக வெளிப்படுத்தியதாகச் சொல்வதற்கில்லை. ஆனால், ஒரு மாற்றுத்தன்மையுடைய இலக்கியம் உருவாகியது என்பது முக்கியமானது.

அடுத்தது, இலங்கையில் – அதாவது நாட்டிலே – பேச முடியாத பல விசயங்களை – புலம்பெயர்ந்த சூழலில் பேசக் கூடியதாக இருந்தது. இதற்கு இந்த நாடுகள் அதற்கான வெளியை அளித்தன. இதனால் ஒப்பீட்டளவில் ஒரு வரையறுக்கப்பட்ட அளவிலான எல்லையில் ஜனநாயக குரல்கள் எழுந்தன. இது மாற்று இலக்கியத்துக்கான தளத்தை உருவாக்கியது. மாற்று இலக்கியம் என்று இங்கே குறிப்பது, ஜனநாயக உள்ளடக்கத்தை ஓரளவுக்குக் கொண்டது என்பதால் ஆகும். இது ஜனநாயகம் மறுதலிக்கப்படும் சூழலில் எதிர்ப்பிலக்கியமாகக் காணப்பட்டது.

அப்படிப்பார்த்தால், எதிர்ப்பிலக்கியத்தின் ஒரு முகமாகவும் புலம்பெயர் இலக்கியம் இருந்தது என்றே கூற வேண்டும். இது ஒரு பெரிய பங்களிப்பே. இதை நாம் புலம்பெயர் இலக்கியத்தின் மூன்றாம் தலைமுறை எனலாம். பண்பு ரீதியாக ஜனநாயகத்துக்கான குரலை முன்வைத்ததோடு புதிய களச் சூழலையும் அடையாளப்படுத்தியது. இது மூன்றாம் தலைமுறைப் பண்பைக் கொண்டது.

ஆனால் இது நீடிக்கவில்லை. அல்லது அடுத்த கட்டத்துக்கு முழு வளர்ச்சியடையவில்லை. காரணம், இதற்குள் சாதி அடையாளம் போல,  இயக்க அடையாளங்களையும் தங்களுடைய அரசியல் ரீதியான அடையாளங்களையும் கொண்டவர்கள் – அதற்குள் தங்களுடைய நோக்கை மையப்படுத்தி முன்வைக்கத் தொடங்கியதால்,  இந்தப் போக்கிலும் இந்தத் தொடர்ச்சியிலும் இந்தக் கட்டமைப்பிலும் சிதைவுகள் உண்டாகியது. இது பல நாடுகளிலும் பல உடைவுகளும் பிரிவுகளுமாக நிகழத் தொடங்கியது. பிறகு, அப்படியே இலக்கியச் சந்திப்பிலும் தாக்கத்தை உண்டாக்கியது.

இதற்கான காரணங்களில் ஒன்று, முதலில் தனியன்களாக இருந்தவர்கள் எல்லாம், ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளில், குடும்பத்தவர்களாகின்றனர்.அகதிகளாக இருந்த ஆட்களெல்லாம் குடியுரிமை பெற்றவர்களாகி விட்டனர். இதனால் ஏறக்குறைய ஒரு சமூக நிலை உருவாகியது. குடும்பங்கள் சேரத்தொடங்க ஒரு சமூக நிலை வளர்ந்தது. இது  தமிழ்ச்சமூகமாக அந்தந்த நாடுகளில் அடையாளப்படுத்தக் கூடிய நிலையை உருவாக்கியது. பிரான்ஸில் லாசப்பல் தொடக்கம் கனடாவில் ரொறொன்டோ வரையில் இதை நாம் காண முடியும். குடும்பங்கள் என்று வந்து விட்டால், சமூகமாகி விட்டால் அதன் அத்தனை அம்சங்களும் அதில் இருக்கப்பார்க்கும். நல்லது கெட்டது எல்லாமே. சாதி, மதம், பிரதேசம், இனம் என்ற உணர்வுகளும் இதுகளின்ரை அடையாளப் பேணுகைகளும்….இது அப்படியே நாட்டின் அரசியலை அப்படியே காவிக் கொண்டு வந்து புகலிடத்திலும் இறக்கியதாக முடிந்தது.

பிறகு இதைப்பற்றிய எழுத்துகள் வந்தன. இதழ்களும் உரையாடல்களும் நிகழ்ந்தன. இன்னும் இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது நாட்டிலுள்ளதைப்போல இயல்பாக இருக்க முடியாது தத்தளிப்பாகவே உள்ளது. இதை நான்காவது தலைமுறை எழுத்து எனலாம்.

இதேவேளை புலம்பெயர் இலக்கியம் என்பது ஐரோப்பிய எல்லையைக் கடந்து லண்டன், அவுஸ்திரேலியா, கனடா என்று பல இடங்களிலும் புதிய நிலைப் பரவலாக வளர்ந்தது. வெவ்வேறு நிலைப்பாடுகள், வெவ்வேறு போக்குகள், வெவ்வேறு திசைகள் என…

இதைப்போலக் கவிதைகளிலும் பல குரல்கள் வருகின்றன. திருமாவளவன் இதை மிகச் செறிவாகச் சொல்வார் –

பனி வயல் உழவுஎன.

இது இந்த அவதானிப்பு  இந்த உணர்கை முக்கியமான ஒன்று. ஏனென்றால் இதற்கு முதல் இப்பிடி நாங்கள் இந்தப் பனிவயல் அனுபவத்தைப் பெறவில்லை. அவருடைய இன்னொரு கவிதையையும் இங்கே சொல்ல வேணும்.

‘300 ஆண்டுகளின் முன்னே

எங்கள் நிலத்தில் நாங்கள் உழுதுதோம்

அவர்களுக்காய்

300 ஆண்டுகளின் பின்னே

அவர்கள் நிலத்தில் நாங்கள் உழுகிறோம்

அவர்களுக்காய்…

ஆக இங்கே காலமும் களமும் – இடமும் மாறினாலும் அவல நிலை மாறவில்லை. என்பதால் புலம்பெயர் இலக்கியம் ஜனநாயகத்தை விரிக்க முயன்றதோடு தன்னுடைய நிலைமைகளைப் பற்றியும் பேசியது. இது விரிந்து பிறகு,  புதிய தளங்களுக்கு இட்டுச் சென்றது.

புதிய மனிதர், புதிய மொழி, புதிய அனுபவங்கள், புதிய பழக்கவழக்கங்கள், புதிய நிலம், புதிய பண்பாடு, புதிய திணை என்று எல்லாவற்றிலும் ஒரு புதிதான தன்மை ஏற்படத் தொடங்கியது. வாழ்வில் ஏற்பட்ட விரிவுகளும் இருப்பு சார்ந்த போராட்டமும் புலம்பெயர் எழுத்தின் தனித்தன்மைக்குக் காரணமாக இருந்தன.

நாட்டைப் பிரிந்து வந்த குற்ற உணர்வும் – ஏனென்றால் அங்கே போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நெருக்கடிகளுக்குள் வாழ்கிறார்கள். நாம் மட்டும் தப்பி வரலாமா என்ற குற்ற உணர்வு இது. இதோடு கலாச்சார முரண்களும்இ வேற்றுமண்ணில் முகம் கொள்ளும் – அச்சமூட்டுகிற  இனவாதமும் சொந்த மண்ணின் விடுதலை, புகலிட வாழ்வில் எதிர்கொள்ளும் அகதிவாழ்வு, கோஷ்டிமோதல்கள், வேலையில்லாப்பிரச்சினை  எல்லாம் இந்த இலக்கியத்தின் பேசுபொருளாயின. இது இதுவரையான எழுத்துக்கு அப்பாலான ஒரு புதிய களத்தில் நிகழ்வதாகத் தோன்றியது. இது இன்னொரு தலைமுறைப் பண்பைக் காட்டியது.

இவ்வாறான ஒரு வளர்ச்சியைப் பார்த்து விட்டே எஸ்.பொ, டொமினிக் ஜீவா போன்றவர்கள் எதிர்காலத் தமிழ் இலக்கியம் என்பது  – இனிமேல் புலம்பெயர் இலக்கியமாகவே இருக்கும் என்றனர். அதாவது புதிய திணையொன்றின் இலக்கியமாகப் பார்த்தனர்.

சேரன் இதை ஆறாம் திணை என்றார்.

ஆனால், இவர்கள் எதிர்பார்த்ததைப்போல – அல்லது அவ்வாறு சொன்னதைப் போல –

இன்னும் புலம்பெயர் இலக்கியம் அந்தத் திணைக்குரிய முதன்மைத் தன்மையோடு, முழுமையோடு இடத்தைப் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். முற்றிலும் புதிய பிராந்தியத்தின் – புதிய திணையின் அடையாளத்தை – இவை கொண்டுள்ளனவா என்பது கேள்வியே.

இப்பொழுது புதிதாக எழுதுவோர் தமிழ் உணர்பரப்பின் ஊடாட்டப் பிரதேசத்துக்கு அப்பாலான எல்லைகளில் பிரவேசித்து எழுதுகிறார்கள்.

தர்மினி, ஆழியாள், இளங்கோ, தான்யா, பிரதீபா, தமிழ்நதி, சாத்திரி, சோபாசக்தி, கோமகன்,சயந்தன்,தேவகாந்தன்,அகரன், தெய்வீகன், அனோஜன் பாலகிருஸ்ணன், தர்முபிரசாத்,  ஜெயகரன், உமையாள், நெற்கொழுதாசன், சாதனா, மாஜிதா, ஏ.ஜே.டானியல், ஜே.கே என இதில் பலருள்ளனர்.

ஆனாலும் தமிழ்ப் பரப்புக்கு வெளியே பெருங்கவனத்தைப் பெற்ற எழுத்துகள் என்றால் இல்லை என்ற நிலையே உண்டு. சில மொழிபெயர்ப்புகள் பிற மொழிகளில் நடந்தாலும் பெரியளவுக்குச் சர்வதேசக் கவனத்தைப் பெற்ற அளவுக்கில்லை. திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய அளவுக்கு. ஏன், இதுவரையான புலம்பெயர் இலக்கியத்தில் போர் மறுப்பைக் கூட அழுத்தமாகச் சொன்ன அல்லது புலம்பெயர் வாழ்வின் பக்கத்தை அழுத்திய ஒரு நாவலைச் சொல்ல முடியவில்லை. விரிந்த பயணத்திலும் புதிய வாழ்களத்திலும் பெற்ற அனுபவங்களிலும் அவதானங்களிலிருந்தும் பெற்ற வாழ்க்கைத் தரிசனம் எதையும் தரவில்லை. அதாவது இது ஒரு மாற்றுப் பிரதி – மாஸ்டர் பீஸ் என்று சொல்லக் கூடிய அளவுக்கு.

இப்பொழுது  – இதனுடைய தற்போதைய தன்மை – நிலை என்னமாதிரி இருக்கிறது என்றால் – தற்போது புகலிடத்தில் முக்கியமாக எழுதிக் கொள்ளுகிறவர்களை எடுத்துக்கொண்டால் –1990-ம் ஆண்டு காலப்பகுதியிலும் 2009-ற்கும் பின் புலம் பெயர்ந்து வந்தவர்களாக இருக்கிறார்கள்.  2009-ற்குப் பின் எழுதுபவர்களின் எழுத்தில் இவர்களது இருப்பு, இவர்கள் வாழும் புறச்சூழலின் தாக்கங்கள் வெளிப்பட்டாலும் அகதி வாழ்வியலை முழுதுமாக பிரதிபலிப்பதைக் காண முடியவில்லை.

இவர்களது பங்களிப்பு ஒரு புகலிட வாழ்வியற் பரிணாமத்தின் இடைப் புள்ளியாகவே காணப்படுகிறது. இவர்கள் சுமந்து வந்த யுத்தச் சூழலின் அனுபவங்கள், நினைவுகளின் பதிவுகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன.

மறுபக்கத்தில் புலம்பெயர் சூழலில் எதிர்கொள்கின்ற ஒரு வளர்ச்சியை நாம் பார்க்கலாம். குறிப்பாக அவுஸ்திரேலியா – கனடா போன்ற நாடுகளில் அங்குள்ள பூர்வகுடிகளைப் பற்றி அக்கறைப்படும் அளவுக்கு மாறியுள்ளது.

ஆழியாள், கற்பகம் யசோதர, தான்யா, சுமதி தொடக்கம் தெய்வீகன் வரையில் இதை இவர்கள் கவனத்தில் கொண்டு எழுதுவதைக் காணலாம்.

மேலும் புகலிட நாடுகளில் காணப்படும் மறைவான இனவாதம், நிறவாதம் மற்றும் பால்நிலை சார்ந்த விடயங்கள் (அந்த நாடுகளில் வாழ்கின்ற சூழலையும் தமிழ் அடையாளத்தையும் இணைக்க முடியாத அந்தர நிலை) என ஒரு பரந்த பரப்பிலான கவனப் புலம் ஏற்பட்டுள்ளது. இவை அடுத்த தலைமுறைப் பண்புடையன.

புதிய நாடுகளில் பெண்களுடைய பிரச்சினைகள் (அவர்கள் எதிர்கொள்கின்ற பிரத்தியேகமான பிரச்சினைகள்) ஏனென்றால் ஆண்கள் முந்தி வந்தனர். பெண்கள் பிந்தி வந்தவர்கள். இவர்களுக்கு மொழி, தனிமை, புதிய சூழலில் தங்களை இணைத்துக் கொள்வதற்குப்படுகின்ற  சிரமங்கள்…. (மருத்துவம், பிள்ளைப்பேறு, பிள்ளைப் பராமரிப்பு..எனப் பல நெருக்கடிகளும் சிரமங்களும்….) இதெல்லாம் எழுதப்படுகின்றன. ஆனால் இன்னும் இது வலுவாக வேணும்.

அடுத்த தலைமுறையின் சவால்கள் (குறிப்பாக அங்கே பிறந்து வளரும் பிள்ளைகள் எதிர்கொள்கின்ற இரட்டைப் பண்பாட்டு நெருக்கடி… இவர்கள் வீட்டில் ஒரு மொழியையும் வெளியே இன்னொரு மொழியையும் வீட்டில் ஒரு வாழ்க்கையையும் பண்பாட்டையும் வெளியே இன்னொரு வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.

ஆகவே இனிமேல் எதிர்காலத்தில் இவற்றை மையப்படுத்திய எழுத்துகளும் வெளிப்படுத்துகைகளுமே வரும்.

இது பல்லின, பல்தேசிய அடையாளங்களுடனான ஊடாட்டங்களை உள்ளெடுக்கிறது. இதுதான் புலம்பெயர் இலக்கியத்தின் இன்னொரு புதிய தொடக்கம் என்று பார்க்கிறேன். இதற்கு உதாரணமாக அங்கே தயாரிக்கப்பட்ட சில படங்களை நாங்கள் பார்க்கலாம். A Gun and A Ring  மற்றும்  Roobha போன்றவை. இதில் முக்கியமானது நாடகங்களும். (நாடகங்களை நான் பார்க்கக் கிடைக்கவில்லை. அதைப்பற்றி வாசித்தும் கேட்டும் அறிந்தவை மட்டுமே.

தொகுத்துப் பார்த்தால் –

புலம்பெயர் இலக்கியத்தின் தனித்த அடையாளம்  என்பது அகதி வாழ்வு,   தாய்நாடு மீதான ஏக்கம்,  விரக்தி,  மாற்றுக்கருத்தாளர்களின் வெளிப்பாடு,  எதிர்ப்புக் குரல்,  ஜனநாயகத்துக்கான முகம், பெண்களின் கருத்துப்பரிமாற்றம்… என இது ஒரு வளர்ச்சிப் பாதையில் நகர்ந்து வந்துள்ளது. இதோடு – நாடகம், சினிமா எனவும் இது திரட்சியடைந்துள்ளது. புகலிடத்தில் வெளிவந்த சஞ்சிகைகள் அதிகமாக இலங்கையின் அரசியலை மையமாக வைத்தே இயங்கின. அத்துடன் சமூகப்பிரச்சினைகளான சாதியம், பெண்ணொடுக்குமுறை சார்ந்தும் இலக்கியப் படைப்புகள் வெளிவந்தன. தமிழ்ச் சமூகத்தில் இயங்கு நிலையிலிருந்த சமூகவொடுக்குமுறைகள்  இன்னோரு பின்புலத்தில்  உயிர்த்திருந்தமையை மையமாகக் கொண்டு பலருடைய எழுத்துகள் வெளியாகி உள்ளன.

கலாச்சார அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டு, அன்னியப் புறச் சூழலில் பெண்கள் எதிர்கொண்ட இன்னல்கள் பெண்களின் படைப்புகளில் வெளிவந்தன. பெண்கள் சந்திப்புகளும் பெண்களின் தனித் தொகுப்புகளும் இவற்றின் சிறந்த பெறுகையாகும்.

(பெண்கள் சந்திப்பு, பெண்கள் சந்திப்பு மலர்கள், பெண்கள் சஞ்சிகைகள்… என).

தவிர, அகதி வாழ்வின் அவலத்தோடு இயந்திரமயமாக்கப்பட்ட  தொழில் சார்ந்த வாழ்வு,  வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட நிலை,  தஞ்சம் அடைவதற்கான  பயணத்தின் அவலம், குடும்பத்தின் பொருளாதாரச் சுமை என்பனவற்றை தாங்கிய இலக்கியங்கள் தான் புகலிட வாழ்வியலின்  சாட்சியங்களாக உள்ளன.

எதிர்காலத்தின் குரல் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் –

என் மகள்

வளர்ந்தவளானாள்

வினாக்களை வரிசையாக

அடுக்கினாள்.

அம்மா

நாங்கள் ஏன்

அகதிகளானோம்

என் தாய் நாடு எங்கே ?

என் தாய் மொழி எது ?

நாங்கள் ஏன் கறுப்பர்களானோம் ?

அவர்களால் ஏன்

ஒதுக்கப்படுகிறோம்?

துருக்கித் தோழி

ஏன் எரிக்கப்பட்டாள் ?’

இது வேர்களைத் தேடுவதற்கு ஒரு அடையாளம்.

இனி இந்த மாதிரியான குரல்களைத்தான் நாம் அதிகமாகக் காணக் கூடியதாக இருக்கும். இதைப்போல பிற இனங்களுக்கும் நேர்ந்திருக்கிறது. யூதர்கள் தொடக்கம் கறுப்பினத்தவர்கள் வரையில்…

ஆகவே இதன் பேசுபொருளும் படைப்பாளிகளும் நிச்சயம் மாற்றம் பெறக்கூடிய சூழலே உண்டு.  புலம் பெயர் நாடுகளில் வாழும் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரின் படைப்புகள் அவர்கள் வாழும் நாட்டின் மொழியில் தான் பெரும்பாலும் எழுதப்படும்.

உலகளாவிய ரீதியில்  விரவியிருக்கும்  இனவாதம், நிறவாதம், பால்வாதம் போன்றவற்றை கேள்வி எழுப்பும் இலக்கியங்களாகத்தான் அவை இருக்கும். முதல் தலைமுறையினர் எதிர் கொண்ட மொழிரீதியான பிரச்சனைகளையும் கலாச்சாரப் பண்பாட்டுச் சிக்கல்களையும் வெறும் அந்நியத் தன்மையோடு அணுகாது. மாறாக  உலகளாளாவிய ரீதியாக நிறுவனமயப்படுத்தப்பட்ட இனம், நிறம், மதம் சார்ந்த ஒடுக்குமுறைகளிற்கெதிரான பல சமூகங்களின்  கூட்டுக்குரலாகவும் அடையாளச் சிக்கல்களை முன்னிறுத்தியதாகவும் பிற சமூகங்களினுடனான ஒப்பிடாகவும் எதிர்கால இலக்கியங்கள் இருக்கும். இலக்கியம் மட்டுமல்ல பிற கலைச்செயற்பாடுகளும்தான்.

ஆனால் இதனுடைய வீச்சான எல்லைக் காலம் அடுத்த அரை நூற்றாண்டு வரைதான். ஆம், புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் இயங்கு நிலைக்காலம் என்பது ஒரு 100 ஆண்டுகள்தான்.

அதற்குப் பிறகு?

பிற்குறிப்பு :

கடந்த வாரம் 12-ம் திகதி அவுஸ்திரேலிய இலக்கிய, கலைச் சங்கத்தின் நிகழ்வில் ஆற்றிய உரையின் குறுகிய வடிவமே இக்கட்டுரையாகும்

கருணாகரன்

கருணாகரன்-இலங்கை

(Visited 197 times, 1 visits today)